இயேசு நாதருடைய திரு இதயத்துக்குத தன்னை ஒப்புக் கொடுக்கும் செபம் |
இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன்(பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்பு செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.
இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.
எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் - ஆமென்.
No comments:
Post a Comment