இறை அழைத்தல் பெருக வேண்டுதல் |
இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும்.
இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.
இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும். இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும்.
ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் , ஆண்டவரே. -ஆமென்.
No comments:
Post a Comment